நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த 3 லாரிகள்: 5 பேர்,12 மாடுகள் தீயில் கருகி பலியான சோகம்

By காமதேனு

ஜெய்ப்பூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மீது மற்றொரு லாரி மோதியது. இதில் மூன்று லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் -அஜ்மீர் நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு லாரிகள் மீது மற்றொரு லாரி மோதி தீப்பிடித்தது. இதில் ஐந்து பேர் மற்றும் 12 கால்நடைகள் உயிருடன் எரிந்த சம்பவம் நேற்று நடந்ததுள்ளது.

ஹரியாணாவில் இருந்து புனே நோக்கி கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு லாரிகளில் ஒன்றின் மீது மோதியது. இதில் டீசல் டேங்க் வெடித்து மூன்று லாரிகளும் மளமளவென தீப்பிடித்து எரிந்தன. ஒரு லாரியில் பிளாஸ்டிக் பைகள், இரண்டாவது லாரியில் நூல் மூட்டைகளும் இருந்தன. இதன் காரணமாக அவை வேகமாக தீப்பிடித்து எரிந்ததாக விபத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.

தீப்பிடித்து எரிந்த ஒரு லாரியில் ஹரியாணாவைச் சேர்ந்த பவன்(28), சஞ்சு(18), தரம்வீர்(34) மற்றும் பீகார் சப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் விஜய்(35) மற்றும் பிஜிலி(26) ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ஜெய்ப்பூர் ரூரல் ஏஎஸ்பி தினேஷ் கூறுகையில், "விபத்தில் தீயில் கருகி 5 பேர் உயிரிழந்தனர். அத்துடன் லாரியில் இருந்த 12 கால்நடைகளும் எரிந்து உயிரிழந்தன. ஓட்டுநர் உறங்கியதால் இந்த விபத்து நடத்திருக்கலாம். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமைனைக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE