போக்குவரத்து மிகுந்த சாலையில் ஆபத்தான முறையில் பைக்கில் சாகசம் செய்யும் ஜோடியின் அதிர்ச்சி வீடியோவை டெல்லி போலீஸார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
காரின் பானெட்டில் அமர்ந்து ஸ்டண்ட் செய்யும் மணப்பெண், ஒரே பைக்கில் வாலிபரை இறுக்கப்பிடித்தபடி இரண்டு இளம்பெண்கள் ஸ்டண்ட் செய்வது என இணையதளங்களில் வீடியோ பெருகி வருகிறது. அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை போலீஸார் வழங்கிய போதும் , கடந்த சில மாதங்களில் இப்படியான வழக்குகள் அதிகரித்துள்ளன.
இதுபோன்ற வழக்குகளைச் சமாளிக்க போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அத்துடன் இதுபோன்ற செயல்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி ஒரு விழிப்புணர்வு வீடியோவை டெல்லி காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஆண், பெண் ஜோடி ஒன்று பொறுப்பற்ற முறையில் பைக் ஓட்டுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது பெண் துணையுடன் ஆண் பைக்கில் ஒரு சக்கரத்தில் பைக்கை இயக்குகிறார். பில்லியன் இருக்கையில் ஆபத்தான முறையில் அமர்ந்திருக்கும் இளம்பெண் அப்போது கீழே விழுகிறார். இப்படி சாகசத்தில் ஈடுபட்ட இருவரும் ஹெமெட் அணியவில்லை.
டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.