அதிர்ச்சி... சபரிமலையில் 6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

By காமதேனு

சபரிமலையில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்த ஏலக்காயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 6.65 லட்சம் அரவணை பாயாச டின்களை அழிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அங்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். இந்த அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவின்பேரில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

சபரிமலை

இந்த ஆய்வின் அறிக்கையில் அரவணை ஏலக்காய் தரமற்றது எனவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால் ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் சபரிமலையில் அரவணை உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள 6.65 லட்சம் அரவணை டின்களை அப்புறப்படுத்தி அழிக்க கேரள அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் தேவசம் போர்டு அனுமதி கோரியது. பூச்சிமருந்து கலந்ததாக கூறப்பட்ட 6.65 லட்சம் அரவணை பாயாச டின்கள் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டன.

அதன்பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட சோதனையில் அரவணை சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டது. அரவணை தயாரிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் அதனை பயன்படுத்தாவிட்டால் அது உண்ண முடியாததாகிவிடும். ஆனால், தயாரித்து இரண்டு மாதங்கள் ஆனதால், இந்த அரவணையை விற்க மாட்டோம் என தேவசம் போர்டு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏலக்காயில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரவணை தயாரிக்கப்பட்டது என்று கூறி, விற்பனை நிறுத்தப்பட்ட அரவணையை அழிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரவணையை அழிக்க தேவசம் போர்டும், மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதை எப்படி, எங்கு அழிப்பது என்பதை இருவரும் சேர்ந்து முடிவு செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அரவணை விற்பனைக்கு தடை விதித்த கேரள உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையையும் உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. வணிக நலன் சார்ந்த விஷயங்களில் உயர் நீதிமன்றத்தின் தலையீடு முறையானதல்ல என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE