அழுகிய நிலையில் மீட்கப்பட்ட டிரைவர் உடல்: மனைவி மீது போலீஸாருக்கு சந்தேகம்

By காமதேனு

விருதுநகர் மாவட்டத்தில் வீட்டில் இருந்து அழுகிய நிலையில் டிரைவர் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரது மனைவியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருக்கண்ணன்(36). இவர் கல்குவாரி ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த அழகியவள்ளி என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

இதனிடையே திருக்கண்ணனுக்கு குடிப்பழக்கமும் இருந்தது. இதன் காரணமாக திருக்கண்ணனுக்கும், அழகியவள்ளிக்கும் அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் நிகழ்வது வழக்கம். கடந்த 25-ம் தேதியும், திருக்கண்ணன் மதுபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். இதனால் அவருக்கும் அழகியவள்ளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்டு அழகிய வள்ளி தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனால் அதன் பின்னர் திருக்கண்ணன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இந்நிலையில் இன்று காலையில் திருக்கண்ணன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்,பக்கத்தினர் கொடுத்தப் புகாரின் பேரில், திருச்சுழி போலீஸார் வீட்டின் உள்ளே போய் பார்த்தனர். அப்போது அங்கே திருக்கண்ணன் இறந்த நிலையில் கிடந்தார். அவரது தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களும் இருந்தன.

இதனால் திருக்கண்ணன் குடிபோதையில் தவறி விழுந்தாரா? அல்லது மனைவியுடன் சண்டை போட்டதில் காயமடைந்தாரா எனவும் போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது 25-ம் தேதி, திருக்கண்ணனுக்கும், அவரது மனைவி அழகிய வள்ளிக்கும் இடையே சண்டை நிகழ்ந்ததாக அக்கம், பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கண்ணனின் மர்ம மரணம் குறித்து, அவரது மனைவி அமுதவள்ளியிடம் போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE