தகாத உறவால் உருவான சிசு: கொன்று புதைத்த கொடூர தாய் கைது!

By காமதேனு

நத்தம் அருகே தகாத உறவினால் உருவான சிசுவை, அதன் தாயே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஐந்து மாத சிசுவின் உடலைத் தோண்டி எடுத்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் வனிதா. இவருக்கும் மார்த்தாண்டத்தை சேர்ந்த அனீஷ் என்பவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ள நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வனிதாவின் உறவு பெண் ஒருவருடன் அனீஷ் மாயமானார்.

இதனால் தனது மகனுடன் வனிதா கூலி வேலை செய்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வேறு ஒரு வாலிபருடன் வனிதாவிற்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் ஐந்து மாத கர்ப்பமானார். இதனால் பழிச்சொல்லுக்கு அஞ்சிய வனிதா தனது வயிற்றில் உருவான சிசுவை அழிக்க முடிவு செய்து அதற்கான மாத்திரையை உட்கொண்டுள்ளார்.

இதில் ஐந்து மாத சிசு வெளியான நிலையில் அதனை வனிதா தனது வீட்டு அருகில் புதைத்துள்ளார். இது குறித்து சாணார்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைக்க, நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி விசாரணை நடத்தியதில் சம்பவம் நடந்தது உறுதியானது.

இதையடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் சிசு புதைக்கப்பட்ட இடத்தில் தடயவியல் மருத்துவக் குழுவினர் எஞ்சியிருந்த சிசுவின் உடலை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE