லஞ்சம் கேட்ட ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர்: கையும், களவுமாக பிடித்துக்கொடுத்த காண்ட்ராக்டர்!

By காமதேனு

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கானத் தொகையை வழங்க ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்ட மேற்பார்வையாளர் லஞ்ச ஒழிப்புதுறையினரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தேனி கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் தனது தாயார் பெயரில் ஒப்பந்ததாரராக பதிவு செய்து அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளைச் செய்து வந்துள்ளார். இவ்வாறு இவர் செய்த பணிகளுக்கான தொகையில் சுமார் 8 லட்ச ரூபாய் வரை ஊராட்சி ஒன்றியத்தினால் வழங்க வேண்டியுள்ளது.

இந்தத் தொகையினை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணனிடம், கருப்பச்சாமி கேட்டுள்ளார். இந்த தொகையை வழங்க வேண்டும் என்றால், ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சிய டைந்த ஒப்பந்ததாரர் கருப்பசாமி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.

அவர்கள், ரசாயனப் பவுடர் தடவிய ரூ.7 ஆயிரம் மதிப்புடைய நோட்டினை கருப்பசாமியிடம் கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை கருப்பசாமி, ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கையும், களவுமாக ராதாகிருஷ்ணனை பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE