கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி வேனை மறித்து ஒரு கும்பல் எல்கேஜி மாணவனைக் கடத்தியது. இதில் சிறுவனை போலீஸார் மீட்டனர். அத்துடன் அவரைக் கடத்திய அவரது தந்தை உள்பட 17 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிபின் பிரியன் என்பவரைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு மூன்று வயதில் ஆத்விக் என்னும் ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியா, தன் மகனை அழைத்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
பிரியா தன் மகன் ஆத்விக்கை கடமலைக்குன்று பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எல்கேஜி வகுப்பில் சேர்த்துள்ளார். இதனால் பிலாங்காலையில் இருந்து ஆத்விக் தினமும் ஸ்கூல் வேனில் பள்ளி சென்று வந்துள்ளார்.நேற்று வழக்கம்போல் காலை 9 மணிக்கு ஸ்கூல் வேனில் பிரியா ஏற்றிவிட்டார். வேன் கடமலைக்குன்று நோக்கிச் சென்று கொண்டு இருந்தபோது பின்னாலேயே இரு கார்கள் அதிக ஹார்ன் அடித்த வண்ணம் வந்தன. இதனால் அவசரமாக யாரோ செல்கிறார்கள் என நினைத்து ஸ்கூல் வேன் டிரைவர் வழி விட்டுள்ளார்.
ஆனால், ஸ்கூல் வேனை முந்தி காரை நிறுத்திய கும்பல் சர, சரவென வேனுக்குள் ஏறி பிரியாவின் மகனைக் கடத்திச் சென்றது. அந்த வழியாக வந்தவர்கள் பைக் உள்ளிட்ட தங்கள் வாகனங்களில் துரத்திச் சென்றும் அவர்களைப் பிடிக்க இயலவில்லை. ஒருவேளை பிரியா தன் கணவரைப் பிரிந்து இருப்பதால் அவரோ, அவர் சொல்லி அவரது நண்பர்களோ கடத்தி இருக்கலாமா என்னும் கோணத்தில் தக்கலை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் ஈத்தாமொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ஆத்விக் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் போலீஸாரைப் பார்த்ததும் தப்பி ஓடிய ஆத்விக்கைக் கடத்திய அவரது தந்தை பிபின் பிரியன், அவரது தாயார் பூமதி, சகோதரி கமலா பிரீத்தி, பிபின் பிரியனின் நண்பர்கள் அஜித், சரண், முகேஷ் உள்பட 17 பேர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து குமரிமாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.