சட்லஜ் நதியில் கார் விழுந்து விபத்திற்குள்ளானதில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 9வது நாளான இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அதிமுக பிரமுகருமான சைதை துரைசாமி குடிமைப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது மகன் வெற்றி துரைசாமி, இந்த நிறுவனத்தை மேலாண்மை செய்து வருவதோடு, சினிமா துறையில் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். ’என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள வெற்றி, திரில்லர் ஜானரில் படம் ஒன்றை இயக்குவதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதற்காக படப்பிடிப்பு தளங்களை பார்வையிடுவதற்காக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவிற்கு அவர் சென்றிருந்தார்.
அங்கு வாடகை கார் ஒன்றை எடுத்துக்கொண்டு, வெற்றி, அவரது உதவியாளர் கோபிநாத் ஆகியோர் சிம்லாவிற்கு சென்று கொண்டு இருந்தனர். காரை ஓட்டிச் சென்ற சிம்லாவை சேர்ந்த டென்சின் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வெற்றி சென்ற கார், கசாங் நலா என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று காரை கயிறு கட்டி மீட்டனர். அப்போது டென்சின் சடலமாக காருக்குள் கிடந்தது தெரியவந்தது.
காரில் இருந்து ஆற்றில் விழுந்த கோபிநாத் சிறிது தூரத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது கின்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த காரில் பயணித்த வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பணியில் போலீஸார், ராணுவம், விமானப்படை மற்றும் நீர் மூழ்கி வீரர்கள் உட்பட ஏராளமானோர் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 8 நாட்களுக்கும் மேலாக தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில், இன்று 9வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
ஏற்கெனவே வெற்றி துரைசாமியின் உடல் எடை கொண்ட பொம்மை ஒன்றை ஆற்றில் விட்டு போலீஸார் சோதனை நடத்தினர். இதேபோல் நீர் மூழ்கி வீரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த மூளை திசுவில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ, வெற்றி உடையதா என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஆய்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெற்றி துரைசாமியின் உடல், பாறை இடுக்குகளில் இருந்தது தெரியவந்ததை அடுத்து, அதனை அவர்கள் மீட்டுள்ளனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக வெற்றி துரைசாமியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெற்றி துரைசாமி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 9 நாட்கள் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் முடிவில் வெற்றி துரைசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளது, அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!
தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!