சென்னை: சூப்பர் மார்க்கெட்டில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருமங்கலத்தில் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 20-ம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் கையில் உருட்டுக் கட்டையுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்தார். அப்போது, மாமூல் கேட்டு சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை மிரட்டினார். பின்னர், சிகரெட் புகைத்தபடி, ‘தீபாவளிக்கு மீண்டும் வருவேன். அப்போது ரூ.5 ஆயிரம் தர வேண்டும். இல்லையென்றால் பெட்ரோல் ஊற்றி கடையை கொளுத்திவிடுவேன்’ என உரிமையாளரை மிரட்டிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஒருவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த வீடியோ போலீஸாரின் கவனத்துக்கும் சென்றது. திருமங்கலம் போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அந்த நபர், பிரபல ரவுடி விக்கி என்பதும்,ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த விக்கியை பிடித்த போலீஸார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
» இஎம்ஐ செலுத்துவதற்காக ஆம்பூரில் பூட்டிய வீடுகளில் திருடிய மாமன் - மைத்துனர் கைது!
» விவசாய கிணற்றின் பாசன குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: கரூரில் பரிதாபம்