சென்னையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: ரகசிய தகவலால் அதிகாரிகள் அதிரடி

By காமதேனு

சென்னையில் சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்தி நிறுத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து, பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மேடவாக்கம், முருகன் கோயில் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் குமார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 15 வயதில் மகளும் உள்ளனர். சிறுமி பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்தநிலையில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய பெற்றோர் தங்களது உறவினரான திருச்சி துறையூரை சேர்ந்த மணிவேல்(26) என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து நாளை (28-ம் தேதி) திருமணம் செய்து வைக்க இருந்தனர்.

இதனிடையே சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்வது குறித்து குழந்தைகள் உதவி மையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கல்பட்டு, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பவித்ரா மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்று சிறுமியை மீட்டு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், உறவினருடன் திருமணம் நடக்கவிருந்தது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த சிறுமியை செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE