என்னை கவனித்துவிட்டு செல்லவும்; ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டல்: திமுக கவுன்சிலரின் கணவர் கைது

By காமதேனு

மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவன மேலாளர் அளித்த புகாரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் இபி காலனி, காமராஜர் நகர், பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவான்மியூரில் செயல்படும் இ.எம்.இ என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பணிகளுக்கான கான்கிரீட் மற்றும் மணல் ஜல்லி போன்றவை லாரிகள் மூலம் அனகாபுத்தூர் பக்தவச்சலம் தெரு வழியாக எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இதே போல் நேற்று இரவு வழக்கம் போல் அவ்வழியாக சென்ற கான்கிரீட் லாரியை வழிமறித்த 4-வது வார்டு திமுக கவுன்சிலர் சித்ராவின் கணவர் தமிழ்குமரன்(35) என்பவர் இந்த வழியில் செல்ல வேண்டும் என்றால் எனக்கு கொடுத்து விட்டுதான் செல்லவேண்டும் என கூறி லாரியை சிறைப்பிடித்துள்ளார்.

ஆனால், ஓட்டுநர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கவுன்சிலரின் கணவர் தமிழ்குமரன் ஓட்டுநரை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் கண்ணன், சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திமுக கவுன்சிலர் சித்ராவின் கணவர் தமிழ் குமரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE