கன்னியாகுமரி மாவட்டத்தில் சீருடையோடு பள்ளிக்குச் சென்று வருவதாக கிளம்பிச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பெயின்டரான இவருக்கு ‘பென்’ என்னும் பெயரில் ஒரு மகனும், ஈவிலின் ஜாய்(16) என்னும் மகளும் உள்ளனர். தன் பணிநிமித்தமாக சுரேஷ், தையாலுமூடு பகுதியில் இப்போது வசித்து வருகிறார். மத்தம்பாளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பென் 12-ம் வகுப்பும், அவரது தங்கை ஈவிலின் ஜாய் பத்தாம் வகுப்பும் படித்து வந்தனர்.
வழக்கமாக தன் அண்ணனுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்லும் ஈவிலின் ஜாய், சிறப்பு வகுப்பு இருப்பதாகச் சொல்லி இன்று முன்கூட்டியே தனியாக பள்ளிக்குச் சென்றார். இதனிடையே காலையில் பள்ளிக்குச் சென்ற பென் தன் தங்கையைப் பார்க்க அவரது வகுப்பிற்குச் சென்றார். அங்கு வகுப்பறையில் ஈவிலின் ஜாய் இல்லை. அவரது தோழிகளிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ஈவிலின் ஜாய் இன்று பள்ளிக்கு வரவில்லை எனத் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவன் பள்ளி ஆசிரியர்களிடம் சொன்னார்.
இந்தநிலையில் அதேபகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அரசுப்பள்ளி சீருடையுடன் மாணவி ஒருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருப்பதாக பள்ளிக்குத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது அது ஈவிலின் ஜாய் எனத் தெரியவந்தது. அதே நேரத்தில் அவர் ஏன் தற்கொலை செய்தார் என்னும் விவரங்கள் தெரியவில்லை. நாகர்கோவில் ரயில்வே போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.