தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

By காமதேனு

தஞ்சாவூரில் இரு வேறு சம்பவங்களில் குழந்தைகள் உட்பட 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (42). கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (40). தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆருத்ரா (11), சுபத்ரா (7) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராஜேஷுக்கும் மனைவி ஆர்த்திக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் பாபநாசத்தில் தனது தோழியின் வளைகாப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, இரண்டு மகள்களுடன் ஆர்த்தி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இருப்பினும் அவர் வீடு திரும்பாததால், குழப்பம் அடைந்த ராஜேஷ் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கும்பகோணம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உத்தாணி பகுதியில், கண்களை கட்டியபடி ரயில் முன் பாய்ந்து பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று போலீஸார் விசாரணை நடத்திய போது, அது ஆர்த்தி, ஆருத்ரா, சுபத்ரா ஆகியோர் என்பது தெரியவந்தது. மூவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே போலீஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் திருவிடைமருதூர் கட்டளை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ரேவதி (50), மகள் மகேஸ்வரி (30) ஆகியோர் நேற்று காணாமல் போனதாக உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தபோது, நேற்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மைசூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் குழந்தைகள் உட்பட 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE