செல்ஃபி எடுத்தபோது ஏரியில் விழுந்த கேரள மாணவி; காப்பாற்ற முயன்ற மாணவனும் பலி: ரஷ்யாவில் நடந்த துயரம்

By காமதேனு

ரஷ்யாவில் செல்ஃபி எடுக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற கேரளா மாணவனும் நீரில் மூழ்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தார்த் சுனில்

கேரளா மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் சுனில்(24), கண்ணூரைச் சேர்ந்தவர் பிரதிஷா(24). இவர்கள் இருவரும் ரஷ்யாவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவர் உள்பட எட்டு மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள ஏரிக்கு சுற்றுலா சென்றனர்.

அப்போது பிரதிஷா செல்ஃபி எடுக்க முயன்ற போது தண்ணீருக்குள் தவறி விழுந்து மூழ்கினார். இதனைப் பார்த்த சித்தார்த் சுனில் அவரைக் காப்பாற்ற தண்ணீருக்குள் பாய்ந்தார். ஆனால், நீரில் மூழ்கி அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து சித்தார்த்தின் தந்தை சுனில் குமார் கூறுகையில்," ஜூன் 24 அன்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. என்னுடைய மகனும் அவனுடைய வகுப்பு தோழி பிரதிஷா மற்றும் மாணவர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது பிரத்ஷா, செல்ஃபி எடுக்கும்போது ஏரியில் தவறி விழுந்தாள். அவரைக் காப்பாற்றுவதற்காக எனது மகன் ஏரியில் குதித்ததாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. துரதிர்ஷ்டவசமாக, அவளை மீட்க முயன்றபோது, அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். அவர்கள் இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை முடிந்து, சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு கேரளாவுக்குக் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று அவர் கூறினார்.

மருத்துவம் படிக்கச் சென்ற கேரளா மாணவர்கள் இருவர் ரஷ்யாவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE