`நான் கொலை செய்துவிட்டேன்'; இரவில் கத்தியை வைத்து அலறிய வாலிபர்: பதறிய பொதுமக்கள்

By காமதேனு

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் கொளஞ்சி(45). இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி அங்குள்ள பகுதிகளில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அதே மேம்பாலத்திற்கு கீழ் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ்(22) என்ற வாலிபர் கடந்த ஒரு வாரமாக தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு அவினாஷ் தரமணி லிங்க் ரோடு அருகே கத்தியுடன் நின்று கொண்டு, `நான் கொலை செய்துவிட்டேன்' என கூச்சலிட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது, கொளஞ்சி என்பவரை அவினாஷ் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார். கொளஞ்சி உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்பு கொலையாளி அவினாஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொளஞ்சி மற்றும் அவினாஷ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தி வருவதும், அப்போது போதையில் அவினாஷை பார்த்து கொளஞ்சி. நீ ஓரினச்சேர்க்கையாளர் தானே' எனக்கூறி அவரை தொடர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவினாஷ் மறுப்பு தெரிவித்ததால், கொளஞ்சி, `நீ தூங்கிவிட்டால் உனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது' என ஆபாசமாக பேசி கிண்டல் செய்துள்ளார். இதேபோல நேற்று இரவு கொளஞ்சி அவினாஷை ஓரின சேர்க்கைக்கு அழைத்து ஆபாசமாக பேசியதால் ஆத்திரமடைந்த அவினாஷ் காய்கறி வெட்டும் கத்தியால் கொளஞ்சியை குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவினாஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE