தனது கூட்டாளியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தவர். மதுரை கருப்பாயூரணியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் செந்தில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த கொலைவழக்கில் வரிச்சியூர் செல்வம் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் செந்தில் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நான்காவது குற்றவாளியான செந்திலை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதேசமயம், செந்தில் காணாமல் போனதாக அவரது மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் முருகலட்சுமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து தனிப்படை நடத்திய விசாரணையில், சென்னையில் செந்தில் கொலை செய்யப்பட்டதும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் வரிச்சியூர் செல்வத்திடம் கடைசியாக பேசியதும் தெரிய வந்தது. அத்துடன் இக்கொலையில் வரிச்சியூர் செல்வத்திற்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வரிச்சியூர் செல்வத்திடம் விசாரணை நடத்த அனுமதி கோரி விருதுநகர் நீதித்துறை நடுவர் எண் 2-ல் போலீஸார் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.