விவசாய கிணற்றின் பாசன குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: கரூரில் பரிதாபம்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அருகே விவசாயக் கிணற்றின் பாசனக் குழாயில் 3 வயது சிறுவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் குளித்தலையை அடுத்த நச்சலூர் அருகேயுள்ள சின்னகளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். தச்சுத்தொழிலாளி. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகன் தர்ஷித்-க்கு 3 வயது. சனிக்கிழமை (ஆக. 24) மதியம் வீட்டருகே உள்ள கந்தசாமியின் விவசாய நிலத்தில் மகிழன் என்ற மற்றொரு சிறுவனுடன் தர்ஷித் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

அந்த விவசாய கிணற்றில் இருந்து தொலைவில் உள்ள வயல்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக வயலில் சிமெண்ட் குழாய் பதிக்கப்பட்டு சில மீட்டர் தூரங்கள் இடைவெளியில் மடைமாற்றம் செய்வதற்காக சிறியளவிலான திறந்தவெளி சிமெண்ட் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிறிய சிமெண்ட் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த தர்ஷித் திடீரென தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான். அப்போது கிணற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் சென்றுக் கொண்டிருந்ததால் தண்ணீருடன் தர்ஷித் அடித்துச் செல்லப்பட்டு குழாயினுள் சிக்கிக்கொண்டான்.

இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் மகிழன் தெரிவித்ததை அடுத்து தண்ணீர் நிறுத்தப்பட்டு பொக்லைன் மூலம் சிமெண்ட் குழாய்களை உடைத்து சிறுவனை சிக்கியுள்ள இடத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 இடங்களில் குழாய்களை உடைத்து தேடிய நிலையில் 100 மீட்டர் தூரத்தில் சிமெண்ட் குழாய்க்குள் மாட்டியிருந்த சிறுவன் தர்ஷித் சடலமாக மீட்கப்பட்டான்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தர்ஷித்தின் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாசன குழாயில் சிறுவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE