ஏ.சி அறையில் ஹைடெக் முறையில் கஞ்சா வளர்த்து விற்பனை: 5 மருத்துவ மாணவர்கள் கைது!

By காமதேனு

கர்நாடகாவில் வாடகை வீட்டில் ஹைடெக் முறையில் கஞ்சா வளர்த்து விற்பனை செய்து வந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஷிவமோகா அருகே தனியார் மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களான அப்துல்லா, அபிர்தா ஆகியோர் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். ஹலே குருபுராவில் வாடகை வீட்டில் வசித்து வந்த அவர்களிடமிருந்து 466 கிராம் கஞ்சா மற்றும் சில தடை செய்யப்பட்ட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும் பொதுமக்களிடம் கஞ்சா விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதே போல சிவகங்கா லே அவுட்டில் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களான தமிழ்நாடு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விக்னராஜா, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டிதுரை, கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் கஞ்சா பயிரிட்டது போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வசித்த வீட்டை போலீஸார் சோதனையிட்டனர்.

அப்போது குளிரூட்டப்பட்ட அறையில் சிறப்பு எல்இடி பல்புகளைப் பயன்படுத்தி செயற்கை சூரிய ஒளியை உருவாக்கி அங்கு கஞ்சா பயிரிட்டிருந்தது. கஞ்சா சாகுபாடி குறித்த விவரங்களை இணையதளம் மூலம் சேகரித்து ஆன்லைனில் கஞ்சா விதைகளை வாங்கியுள்ளனர். கஞ்சா சாகுபடி செய்து சந்தையில் அவர்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 227 கிராம் உலர் கஞ்சா, 1.5 கிலோ புதிய கஞ்சா, கஞ்சா விதைகள், 6 டேபிள் ஃபேன்கள், 2 ஸ்டெபிலைசர்கள், 3 எல்இடி விளக்குகள், ஹூக்கா பைப்புகள், பானைகள், ரூ.19 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மூவரையு ம் போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகாவில் கஞ்சா பயிரிட்டதாகவும், விற்பனை செய்ததாகவும் தனியார் மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE