கபடி போட்டிக்காக மகனை அழைத்து சென்ற தந்தை; எதிரே வந்த வாகனத்தில் மோதி உயிரிழப்பு!

By காமதேனு

கோவை அருகே அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீதுமோதி விபத்துக்குள்ளானதில், கபடி போட்டிற்கு மகனை அழைத்துச்சென்ற தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி காட்சிகள்

கோவை பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது மகன் அஜ்மல் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அஜ்மல் கபடி போட்டியில் பங்கேற்பதற்காக அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் கோவை எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அதேசமயம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் கார் ஒன்றில் வாளையார் அணையை சுற்றிப் பார்த்துவிட்டு, அதிவேகத்துடன் வந்துள்ளனர். கார் எட்டிமடை அருகில் உள்ள கோழிப்பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றுள்ளது.

அப்போது எதிரே தனியார் கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஜாகிர் உசேன் மற்றும் அவரது மகன் அஜ்மல் இருவரும் இரு சக்கர வாகனத்தோடு தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ஜாகிர் உசேனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதில் படுகாயம் அடைந்த அஜ்மல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கந்தப்பகவுண்டன் சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து காரில் பயணம் செய்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE