10ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: குளத்தில் குதித்து குற்றவாளி மரணம்

By KU BUREAU

அசாம்: நாகோன் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி, விசாரணையின் போது குளத்தில் விழுந்து இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

நாகோனில் 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை ஒரு குளத்திற்கு அருகில் மயக்க நிலையில் தனது சைக்கிளுடன் கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அச்சிறுமியை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமி பயிற்சி வகுப்பில் இருந்து திரும்பும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அச்சிறுமியை மீட்டு விசாரித்தபோது , மூன்று இளைஞர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், போராட்டங்களையும் தூண்டியது.

இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மூவரில் தஃபாசுல் இஸ்லாம் என்பவர் போக்சோ மற்றும் பிற பிரிவுகளின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 22ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்த பகுதிக்கு தஃபாசுல் இஸ்லாம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது, அவர் போலீஸ் குழுவைத் தாக்க முயன்று தப்பியோடி குளத்தில் குதித்ததாக நாகோன் காவல் கண்காணிப்பாளர் ஸ்வப்னனீல் தேகா கூறியுள்ளார்.

"விசாரணையின் ஒரு பகுதியாக, எங்கள் குழு அவரை நேற்றிரவு சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றது. ஆனால் அவர் திடீரென்று காவல்துறையைத் தாக்கி அருகில் உள்ள குளத்தில் குதித்தார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேர தேடுதலுக்குப் பிறகு, அவரது சடலம் மீட்கப்பட்டது”என்று எஸ்.பி தேகா கூறினார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்தது. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அசாம் தீயணைப்புப் படை குற்றம்சாட்டப்பட்ட நபரின் உடலை மீட்டெடுத்தனர். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தஃபாசுல் இஸ்லாம் இறந்த பிறகு, அவரது கிராமத்தில் உள்ள மக்கள் அவரது இறுதிச் சடங்குகளில் பங்கேற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE