உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் முஸ்லிம்கள் போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தராகண்டின் ஹால்ட்வானி வன்முறை, ஞானவாபி மசூதி தகராறு மற்றும் நாட்டில் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக, உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு 'இத்தேஹாத்-இ-மில்லத்' அமைப்பின் தலைவர் தவுகீர் ராசா கான் கடந்த 8ம் தேதி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. மேலும், தவுகீர் ராசா கான் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்த இஸ்லாமிய கல்லூரி மைதானத்துக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. தவுகீர் ராசா கான் போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டார். அங்கு ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.
அரசு தடை விதித்தபோதும் , தவுகீர் ராசா கானின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீதிகளில் குவிந்தனர். ஆனால் போராட்டம் முடிந்த பிறகு, அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக பரேலியில் கடந்த இரண்டு நாள்களாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போதும் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பரேலி எஸ்எஸ்பி- குலே சுஷில் சந்திரபன் கூறுகையில், "நிலைமை கட்டுக்குள் உள்ளது. எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கிறோம் "என்றார். சன்னி இஸ்லாம் பரேல்வி பிரிவின் நிறுவனர் அகமது ராசா கான் கூறுகையில், "அரசு முஸ்லிம்களை எதிரிகளாக ஆக்குகிறது. அரசாங்கத்தின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!
ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!
ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!
அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!