ஏடிஎம்மில் பணம் எடுத்துத்தரச் சொன்ன பெட்டிக்கடைக்காரரிடம் மோசடி: ஒருவர் கைது

By காமதேனு

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தரச்சொன்ன பெட்டிக்கடைக்காரரின் கார்டை மாற்றிக் கொடுத்து அவரின் கணக்கில் இருந்து 48 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம், பரும்பு குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் முருகன்(50) அதேப் பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது முருகன் தனக்குப் பின்னால் ஏடிஎம்மில் நின்றவரிடம் பணம் எடுத்துக் கொடுக்கச் சொல்லியுள்ளார். அவர் ஏடிஎம் கார்டை மிஷினுக்குள் செலுத்திவிட்டு பணம் வரவில்லை என கார்டைக் கையில் கொடுத்தார்.

முருகன் கார்டை வாங்கிச் சென்ற சில நிமிடங்களிலேயே அவரது ஏடிஎம் கார்டில் இருந்து பல ஏடிஎம்களின் மையங்கள் வழியே 48 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக வரிசையாக எஸ்எம்எஸ்கள் வந்தன. அப்போது தான் அவர் தன் ஏடிஎம் கார்டு மாற்றப்பட்டதை முருகன் தெரிந்துகொண்டார். தான் பணம் எடுக்கச் சொன்னவரிடம் பாஸ்வேர்டைச் சொன்னதை வைத்து அவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸில் முருகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் ஆய்வுசெய்தனர். அப்போது, திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த பக்ருதீன்(48) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 13 ஏடிஎம் கார்டுகள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE