காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணிடம், செல்போனில் ஆபாசமாகப் பேசிய விளாத்திகுளம் எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றியவர் சுதாகர். இந்த காவல் நிலையத்திற்கு திருமணம் முடிந்த இளம்பெண் ஒருவர், புகார் கொடுக்க வந்தார். அந்த புகார் மனுவில் இருந்து அவரது செல்போன் எண்ணை எடுத்த எஸ்.ஐ சுதாகர் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு போன் செய்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண், அவரது கணவரிடம் கூறி அழுதுள்ளார்.
இதுகுறித்து எஸ்.ஐயிடம், அந்த பெண்ணின் கணவர் கேட்டபோது, "உன்னைக் கைது செய்துவிடுவேன். நான் அப்படித்தான் பேசுவேன்" என எஸ்.ஐ சுதாகர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரித்த தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன்,புகாருக்குள்ளான எஸ்.ஐ சுதாகரை ஆயுதப்படை முகாமுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
ஆயுதப்படை முகாமுக்கு மாற்றப்பட்டு உள்ள எஸ்.ஐ சுதாகர் கடந்த 4 நாள்களுக்கு முன்புதான், விளாத்திகுளத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் இருகுற்றவாளிகளை விரைந்து பிடித்து, நகைகளை மீட்டதற்காக எஸ்.பியால் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.