கேரளாவில் வங்கியில் கையாடல் செய்த மேலாளர் - திருப்பூரில் அடமானம் இருந்த 4 கிலோ நகைகள் பறிமுதல்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: கேரள மாநிலத்தில் உள்ள தேசிய வங்கியின் கிளை மேலாளர், வாடிக்கையாளர்களின் நகைகளை திருடி, திருப்பூர் தனியார் வங்கியில் அடமானம் வைத்த 4 கிலோ 600 கிராம் நகையை இன்று (ஆக. 23) பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதா ஜெயக்குமார் (34). இவர் கோழிக்கோடு மாவட்டம் வடகரை எடோடியில் (பாங்க் ஆப் மகாராஷ்டிரா) தேசிய வங்கியின் கிளை மேலாளராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் எடோடி வங்கியில் புதிய மேலாளர் பொறுப்பேற்ற நிலையில், அங்கு தணிக்கை நடந்தது. அப்போது வங்கியில் பலர் வைத்த நகைகள் போலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ 800 கிராம் நகைகள் போலியாக இருப்பது தெரியவந்தது. மேலும் வங்கி மேலாளராக இருந்த மாதா ஜெயக்குமார் எர்ணாகுளம் கிளையில் பொறுப்பு ஏற்காமல், தலைமறைவானதும் தொடர்ந்து வங்கித் தரப்பில் சந்தேகத்தை அதிகரித்தது. வங்கித் தரப்பில் அளிக்கப்பட்ட கேரள வடகரை போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, வழக்கு பதிந்தனர். தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் மாதா ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவரை தெலுங்கானாவில் வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீஸார் பிடித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அந்த நகைகளின் சிலவற்றை ஜெயக்குமாரின் நண்பரான, திருப்பூர் சந்திராபுரம் கேஎன்பி காலனி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கார்த்திக் (29) என்பவரிடம் தந்து, அடமானம் வைத்து பணம் பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மாதா ஜெயக்குமாருடன், கேரள மாநில போலீஸார் இன்று (ஆக. 23) காலை திருப்பூர் வந்த நிலையில், கார்த்திக் தலைமறைவானார். திருப்பூர் புஷ்பா திரையரங்கம் மற்றும் காங்கயம் சாலைகளில் உள்ள, ஒரே தனியார் வங்கியின் இருவேறு கிளைகளில் போலீஸார் மற்றும் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து 4 கிலோ 600 கிராம் நகையை கேரள போலீஸார் இன்று வங்கிகளில் பறிமுதல் செய்தனர்.

இதையொட்டி, வங்கிகளின் முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கார்த்திக்கை தேடி வருவதாகவும், இதில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து மாதா ஜெயக்குமாரிடம், அவர் எங்கெங்கு வைத்து பணத்தை பெற்றுள்ளார் என்பது தொடர்பாகவும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE