டைட்டானிக் அருகே வெடித்துச் சிதறிய நீர் மூழ்கிக் கப்பல்: 5 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

By காமதேனு

டைட்டானிக் கப்பலைக் கடலுக்கு அடியில் பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து அதில் இருந்த 5 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. அத்துடன் நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலை கடலுக்கு அடியில் பார்க்கச் சென்ற நீர்மூழ்கி கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடல் பகுதியில் திடீரென காணாமல் போனது.

இந்த கப்பலில் பிரிட்டிஷ் பணக்காரரான ஹமிஷ் ஹார்டிங், தொழிலதிபர் ஷாஜதா தாவூத் ,அவரது மகன் சுலோமான் தாவூத் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன்கேட்டின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ், பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் பைலட் பால் ஹென்றி ஆகிய 5 பேர் பயணித்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் பல்வேறு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

டைட்டானிக் கப்பல் மூழ்கியிருந்த கடல் பகுதிக்கு அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பகுதிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் சுமார் 1600 அடி ஆழத்தில் கடல் படுகையில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் வால் கூம்பு பகுதி கிடப்பதை நீர்மூழ்கி ரோபோ கண்டுபிடித்து இருப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் இருந்த போது அழுத்தம் காரணமாக பயங்கரமாக வெடித்துச் சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் குறித்த சர்வதேச தேடல் பணி நிறைவுபெறுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE