மதுரை: மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கம்பம் பகுதியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியை அவரது குடும்பத்தினர் பார்த்துவிட்டுச் சென்ற நிலையில், இன்று காலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள பேச்சுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தவ ஈஸ்வரன் (29). இருவரும் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினர். இவர்கள் மீதான வழக்கில் 2023ல் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தவ ஈஸ்வரனை நேற்று அவரது குடும்பத்தினர் மனு போட்டுப் பார்த்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை தவ ஈஸ்வரன் அவரது அறைக்கு பக்கத்திலுள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதைக் கண்டு சிறைத்துறையினரும் பிற கைதிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தவ ஈஸ்வரனின் உடல் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில், கரிமேடு காவல் ஆய்வாளர் சங்கர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நீதிபதி விசாரணையும் நடைபெற்றது. நேற்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நேரில் பார்த்துச் சென்ற பிறகு இரவில் தவ ஈஸ்வரன் மன அழுத்ததில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது தற்கொலைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், சிறை வளாகத்திற்கு 24 மணி நேரமும் ரோந்து உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறை இருக்கும் சூழலில் தவ ஈஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது சிறைக்குள் போதிய கண்காணிப்புகள் இல்லையோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.