கோவை அருகே நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அடுத்தடுத்த நிறுவனங்களுக்கும் தீ பரவி வருவதால் பொது மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
கோவை அடுத்த குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷீத் என்பவருக்கு சொந்தமான 'EMBELLSGE’ என்ற நிறுவனம் குனியமுத்தூர் அடுத்த அறிவொளி நகர பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நகைக்கடைகளில், நகைகளை வைக்க பயன்படுத்தப்படும் நகைப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மதியம் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நகைப்பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பரவத் துவங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். அடுத்த சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது.
நிறுவனத்தின் உள்ளே வார்னிஷ் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக வெப்பம் காரணமாக தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்களும் வெடித்து சிதறத் தொடங்கின. இந்த தீ விபத்து காரணமாக கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முடியாததால் ரசாயன நுரை கொண்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து அருகாமையில் உள்ள பிளாஸ்டிக் குடோனுக்கும் பரவியதால் தீ மேலும் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!
அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!
ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!
பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!