சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி வைரம் கடத்தல்... விமான பயணி கைது!

By காமதேனு

சென்னையில் இருந்து கடத்த முயன்ற ரூ.2.33 கோடி மதிப்புடைய 1004 காரட் வைரக்கற்களை புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு, விமானம் மூலம் பெருமளவு வைரக்கற்கள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு, கடந்த 7-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை தனிப்படை பிரிவினர், 7-ம் தேதி இரவில் இருந்தே, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முகாமிட்டு ரகசியமாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.

வைரம் கடத்தல்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு, சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு செல்லும், தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தயாரானது.

அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த, சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணியாக, தாய்லாந்து நாட்டிற்குச் செல்ல வந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவர் வைத்திருந்த கைப்பையைத் திறந்து சோதனையிட்டனர். அந்தக் கைப்பைக்குள் இருந்த பார்சல்களில், புத்தம் புதிய வைரக் கற்கள் மின்னிக் கொண்டு இருந்தன. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், அந்த பயணியின் விமான பயணத்தை, ரத்து செய்தனர்.

அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, முழுமையாகப் பரிசோதித்தனர். அவருடைய கைப்பை மற்றும் அவர் அணிந்திருந்த உள்ளாடைகள் ஆகியவற்றுக்குள், விலை உயர்ந்த, உயர்ரக வைரக்கற்கள் பெரும் அளவு பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

வைரம் கடத்தல்

அவரிடம் இருந்து 1004 கேரட் வைரக் கற்களைப் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.2.33 கோடி. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், வைரக்கற்களை வெளிநாட்டிற்குக் கடத்த முயன்ற அந்த பயணியைக் கைது செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வைரக்கற்கள் கடத்தலில், இவருடைய பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? அவரிடம் இந்த வைரக் கற்களைக் கொடுத்தது யார்? இவர் தாய்லாந்து நாட்டில் யாரிடம் இந்த வைரக் கற்களைக் கொடுக்க எடுத்துச் செல்கிறார்? இதற்கு முன்னால் இதைப்போல் வைரக் கற்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? இதற்குப் பின்னணியில் உள்ள கும்பல் தகவல் என்ன? என்று பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE