சென்னை கோயம்பேட்டில் உள்ள ஏடிஎம் மிஷினில் பணம் எடுத்த போது கார்டு சிக்கிக்கொண்டதால் ஆவேசமடைந்த மர்ம நபர் ஏடிஎம் மையத்தை அடித்து உடைத்துள்ளார்.
சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் திருவள்ளூர் சாலையில் ஆக்ஸிஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு காவலாளி வழக்கம் போல் ஏ.டி.எம் மையத்தை சோதனையிட்ட போது, ஏடி.எம் கார்டு பயன்படுத்தும் இடத்தில் சேதம் அடைந்து இருப்பதை கண்டு காவலர் அதிர்ச்சியடைந்தார்.
உடனே கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் ஏடிஎம்மின் மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏடிஎம் மையத்திற்கு வந்து பணத்தை எடுத்துள்ளார். பின்னர் ஏடிஎம் கார்டை எடுக்கும் போது மிஷினில் சிக்கிக்கொண்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் இயந்திரத்தை உடைத்துவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளில் பதிவான அடையளங்களை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.