வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையின் மருந்தாளுனருக்கு வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளது. இங்கு ராஜகுமார்(55) என்பவர் மருந்தாளுனராக பணிசெய்து வருகிறார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு, மே 14-ம் தேதி முதல் 1998-ம் ஆண்டு மே 31-ம் தேதிவரை வருமானத்திற்கு அதிகமாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 631 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி ஆர்.கோகுலகிருஷ்ணன் நேற்று மாலை தீர்ப்புக் கூறினார்.

அதில், “இ.எஸ்.ஐ மருந்தாளுனர் ராஜகுமாருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ராஜகுமார் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பொது ஏலம் மூலம் அரசுடமையாக்கவும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE