பள்ளிக்குச் செல்லாமல் தன் நண்பர்களுடன் தினமும் சுற்றிக்கொண்டு இருந்த மகனை திருத்தும் நல்ல நோக்கத்தில் தூக்குப் போடுவது போல் நடித்த ஆசிரியை, கயிறு இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை எஸ்.ஆர்.எம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இருந்தவர் கிருஷ்ணவேணி(51). இவர் தன் கணவரைப் பிரிந்து மகன் விஸ்வநாத் நாராயணன்(15) உடன் வசித்து வந்தார். விஸ்வநாத் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். விஸ்வநாத் தினசரி பள்ளிக்குச் செல்லாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றுவதாகவும், பள்ளுக்கு வரவில்லை எனவும் கிருஷ்ணவேணிக்கு பள்ளியில் இருந்து அழைத்து தகவல் சொன்னார்கள்.
இதனால் கிருஷ்ணவேணி தன் மகனைத் திருத்தும் நோக்கத்தில் தான் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். ஆனால் விஸ்வநாத் நாராயணனோ, தாய் தற்கொலை செய்ய மாட்டார். வெறுமனே நம்மை பயமுறுத்துகிறார் என அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் தற்கொலை நாடகம் போட்ட கிருஷ்ணவேணி, கயிறு இறுகியதால் கழுத்து இறுகி பரிதாபமாக உயிர் இழந்தார். செங்கோட்டை போலீஸார் கிருஷ்ணவேணி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகனை திருத்தும் நோக்கத்தில் தற்கொலை நாடகம் போட்ட ஆசிரியை கயிறு இறுகி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.