பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: சந்தேகத்தின் பேரில் 2 போலீஸார் சஸ்பெண்ட்; போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்

By காமதேனு

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் பட்டியலினப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இரண்டு போலீஸ்காரர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானின் கஜுவாலா பகுதியில் 20 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், மனோஜ் மற்றும் பகீரத் ஆகியோர் அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். செல்போன் அழைப்பு பதிவுகளை மேற்கோள் காட்டி, பாதிக்கப்பட்டவரும் முக்கிய குற்றவாளிகளும் ஒருவருக்கொருவர் ஏற்கெனவே தெரிந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 2 பேர் போலீஸார் என்பது தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் பிரேத பரிசோதனை நடத்த ஒப்புதல் அளிக்க மறுத்து தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை பிரேத பரிசோதனைக்கு சம்மதிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் தேஜஸ்வனி கவுதம் தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கஜுவாலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்துப் பேசிய பிகானேர் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ், "கஜுவாலா காவல்நிலையத்தின் இரண்டு காவலர்கள் உட்பட மூன்று பேர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரு காவலர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

ராஜஸ்தானின் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த சம்பவம் தொடர்பாக அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது. மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர், “கான்ஸ்டபிள்களின் இடைநீக்கம் வெறும் சம்பிரதாயமானது. இதன் காரணமாக சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் காவல்துறை நிர்வாகத்தின் மீது வெறுப்படைந்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்யுமாறு மாநில அரசைக் கோருகிறேன்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE