குமரி மாவட்டத்தில் கடனுக்குக் கொடுத்தப் பொருள்களுக்கு பணம் கேட்ட மளிகைக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, கடையையும் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் உள்ளது கோழிப்போர்விளை. இங்கு ஜான்ரோஸ்(70) என்னும் முதியவர் தன் வீட்டை ஒட்டியே மளிகைக்கடை நடத்தியும் வருகிறார். அது கிராமப் பகுதி. அதிலும் பெரிதாக பொருளாதார வசதி இல்லாதவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் ஜான்ரோஸ் கடனுக்கு பொருள்கள் கொடுப்பது வழக்கம்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் சிஜோ(24) என்பவரின் தாயாரும் அந்தக் கடையில் வந்து பொருள்கள் வாங்குவது வழக்கம். ஆனால் அவர் நீண்டகாலமாக பணத்தைக் கொடுக்கவே இல்லை. இந்தநிலையில் தன் கடைக்குப் பொருள்கள் வாங்கவந்த அஸ்வின் சிஜோவிடம் இதுகுறித்து ஜான்ரோஸ் கேட்டார். கடன் தொகையை எப்படி என்னிடம் கேட்கலாம்? என ஆத்திரப்பட்ட அஸ்வின் சிஜோ, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஜோன் ரோஸின் கடையைச் சூறையாடினார். தொடர்ந்து ஜான்ரோஸின் வீடுபுகுந்து கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்து ஜான்ரோஸ் கொடுத்தப் புகாரின் பேரில் தக்கலை போலீஸார் அஸ்வின் சிஜோ, வினீத்(24), அபினேஷ்(19), ஆகாஷ்(23) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் அபினேஷைக் கைதுசெய்த போலீஸார் தப்பியோடிய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.