கும்மிடிப்பூண்டி: பட்டாக் கத்தியுடன் மின்சார ரயிலில் பயணித்த கல்லூரி மாணவர்கள் கைது

By இரா.நாகராஜன்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பட்டாக்கத்தியுடன் மின்சார ரயிலில் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை - கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கங்களில், மின்சார ரயில்களில் பயணிக்கும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல பிரச்சினை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்படுவதும், கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியால் ரயில்வே நடைமேடைகளை உரசிச் செல்வதும் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், சென்னை- சூலூர்பேட்டை ரயில்வே மார்க்கத்தில் இன்று காலை சூலூர்பேட்டையில் இருந்து, சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ வரலாறு மற்றும் பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான, கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் ஆந்திர மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த தினேஷ்(18) ஆகிய இருவர் பயணித்தனர்.

அப்போது, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையப் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன், இடுப்பில் பட்டாக் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு, தன் நண்பன் தினேஷுடன் பேசிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து, பயணிகள் அளித்த தகவலின் பேரில், கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர், 17 வயது சிறுவன் மற்றும் தினேஷ் பயணித்த ரயில் பெட்டிக்கு விரைந்து வந்து பட்டாக் கத்தியுடன் பயணித்த 17 வயது சிறுவன், தினேஷ் ஆகிய இருவரையும் பிடித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார், 17 வயது சிறுவனிடம் இருந்து பட்டாக் கத்தியை பறிமுதல் செய்ததோடு, சிறுவன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE