கன்னியாகுமரி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் குற்றம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி திடீர் என மாயம் ஆனார். பெற்றோர் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தநிலையில் அந்த மாணவி அழுகுரல் எழுப்பிக் கொண்டே திடீரென வீட்டிற்குள் வந்தார்.
அப்போது மாணவி தன் பெற்றோரிடம் தான் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(21) என்னும் வாலிபர் தன்னைக் கடத்தி சென்றதாகவும், அங்கு இருந்து ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சொன்னார். மணிகண்டன் சாப்பாடு வாங்க வெளியில் சென்று இருந்தபோது தான் தப்பி வந்துவிட்டதாகவும் சிறுமி சொன்னார்.
உடனே சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸார், ஆரல்வாய்மொழி பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.