அறையின் கதவை உடைத்த உறவுகள்; விஷம் குடித்து மயங்கிக்கிடந்த இன்ஸ்பெக்டர்: பணி இடமாற்றம் காரணமா?

By காமதேனு

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி, மகாராஜநகர் வேடவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தூர் முருகன்(55). இவர் நெல்லையில் சி.பி.சி.ஐ.டியின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆய்வாளராக உள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாகவே இவர் இதே பொறுப்பில் உள்ளார். இந்தநிலையில் இன்று காலை வெகுநேரம் ஆகியும் செந்தூர் முருகனின் அறை திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரது அறையை உடைத்துப் பார்த்தபோது செந்தூர் முருகன் விஷம் குடித்த நிலையில் மயங்கியவாறு இருந்தார். உடனே அவரை மீட்டு, திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குற்றப்புலனாய்வுப் பிரிவில் நெல்லை சரகத்தில் பணி செய்துவந்த செந்தூர் முருகனுக்கு, கடந்த இருதினங்களுக்கு முன்பு மதுரை சரகத்திற்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது. அதனால் அவர் மனம் உடைந்தநிலையில் காணப்பட்டு உள்ளார். இந்தநிலையில் அவர் மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என பெருமாள்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE