'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் வெங்கடேஷ் என்பவரை பாஜகவினரை ஏவி கால்களை உடைத்த அவரது மனைவி உட்பட 6 பேர் போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ்(50). இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான 'அசத்தப்போவது யாரு', 'கலக்கப்போவது யாரு' உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். 'கருப்பசாமி குத்தைகைதாரர்', 'சீடன்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மதுரையில் தற்போது விளம்பர ஏஜென்சி வைத்து விளம்பரங்கள் எடுப்பது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்றவற்றை செய்து வருகிறார்.
இதனிடையே வெங்கடேஷுக்கு கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இது மனைவி பானுமதிக்கு தெரியவர அதனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் வெங்கடேஷ் மனைவியை விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையிலும் இருவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். கணவரை தன்னுடன் வீட்டிலேயே வைத்திருக்க முடிவு செய்த பானுமதி தனது வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரியும் மோகன் என்பரிடம் வெங்கடேஷ் காலை உடைத்து வீட்டில் போட வேண்டும் என்று திட்டம் தீட்டினார். மோகன் ராஜ்குமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
வெங்கடேசனின் காலை உடைக்க ஒரு லட்சம் ரூபாய் ராஜ்குமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு கேட்டுள்ளார். அதனால் அந்த முடிவை கைவிட்டு தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக ரீல்ஸ், அரசியல் கருத்து, பாடல் பாடி வீடியோ பதிவிடுவது போன்றவற்றில் வெங்கடேஷ் ஆறுமுகம் என்ற பெயரில் வெங்கடேஷ் ஆர்வமாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் பாஜக கட்சிக்கு எதிராகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிரான கருத்துக்களை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் பாஜகவினர் அவரை நேரில் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனைக் கேள்விப்பட்ட அவரது மனைவி பானுமதி, இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டினார். கணவர் மீது வெறுப்பில் இருந்த அவர், தன்னைப் போலவே கோபத்தில் இருந்த பாஜக பிரமுகர் வைரமுத்து என்பவரை அணுகியுள்ளார். அவருடன் இணைந்து திட்டமிட்டு கடந்த ஜூன் 15 இரவு வெங்கடேஷை திருப்பாலை செல்லும் வழியில் உள்ள நாகனாகுளம் கண்மாய் பகுதிக்கு வரவழைத்து கட்டையால் இரு கால்களையும் அடித்து உடைத்தனர்.
வெங்கடேசனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தல்லாகுளம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெங்கடேஷை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸில் வெங்கடேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த போலீஸார், வெங்கடேஷ் மனைவி பானுமதி(48), ராஜ்குமார்(37), மோகன்(40), வைரமுத்து(38), மலைச்சாமி(35), ஆனந்தராஜ் (37) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் துளசி என்பவரைத் தேடி வருகின்றனர்.