ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் கணவன், மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஹிஜாவு நிதி நிறுவனம் பொதுமக்களிடம் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, 4.400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது.
இந்த மோசடி தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து ரூ.3.35 லட்சம் பணம், 448 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ.80 லட்சம் மதிப்புள்ள 8 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் 162 வங்கிக் கணக்குகளில் இருந்த 14.47 கோடி ரூபாயை முடக்கியதுடன், 75.6 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள 54 அசையும் சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்கில் இயக்குநர் அலெக்சாண்டர், முகவர்கள் உட்பட தொடர்ந்து வெளிநாட்டில் தலைமறைவாகி இருப்பதால் அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளதுடன், அவர்களைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் இயக்குநராக செயல்பட்ட சுஜாதா கந்தா மற்றும் அவரது கணவரும், ஐசிஎப் ஊழியருமான கோவிந்தராஜுலு ஆகிய இருவரையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். கைதான தம்பதியர், பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து சில முக்கிய ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் வங்கிக் கணக்கை முடக்கி இருப்பதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.