மகாராஷ்டிராவில் பெற்றோரை ஆபாசமாக பேசிய நண்பனைக் கல்லால் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்று உடலை ஆற்றில் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள ஆற்றில் கல்லால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் உடல் ஜூன் 11-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை மீட்ட முர்பாத் காவல் நிலைய போலீஸார், விசாரணையைத் தொடக்கினர்.
அப்போது ஆற்றில் இறந்து கிடந்தது தனவாலியைச் சேர்ந்த கிரண் நந்து கடவ்(24) என்பது தெரிய வந்தது. இவர் காணாமல் போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக போலீஸார், கிரணின் நண்பர் ராதேஷ்யாம் மொஹிலால் சிங்(20) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், கிரணை ராதேஷ்யாம் கொலை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக கிரண், ராதேஷ்யாம் நண்பர்களாகியுள்ளனர். அடிக்கடி அவர்கள் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது ராதேஷ்யாமின் இறந்த பெற்றோரை தகாத வார்த்தைகளால் கிரண் திட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜூன் 11-ம் தேதி இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது மீண்டும் ராதேஷ்யாமின் பெற்றோரை ஆபாசமாக கிரண் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதேஷ்யாம், கல்லால் தாக்கியதுடன் கழுத்தை நெரித்து கிரணைக் கொன்றுள்ளார். இதன் பின் அவரது உடலில் பெரிய கல்லைக் கட்டி ஆற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது " என்றனர். இதையடுத்து ராதேஷ்யாமை போலீஸார் இன்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.