திருவிடைமருதூர் அருகே வயலில் 20 அடிக்கு பள்ளம் பறித்து மணல் கடத்தல் - 9 பேர் கைது

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சை: திருவிடைமருதூர் வட்டம் மணலூரில் மணலை கடத்தி தமிழகம் முழுவதும் விற்பனை செய்துவந்த 9 பேரை போலீஸார் கைது செய்து சிறையில அடைத்தனர்.

இடையாநல்லூரைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவருக்கு சொந்தமான வயல் மணலூரில் உள்ளது. இந்த வயலில் 4 அடிக்கு கீழ் பொக்லைன் மூலம் பள்ளம் பறித்து, அதன் கீழுள்ள மணலை, உரிய அனுமதியின்றி, லாரியில் கடத்தி தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என திருப்பனந்தாள் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார், அந்த இடத்திற்குச் சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, பொக்லைன் மூலம் மணலை எடுத்து விற்பனைக்காக டிராக்டர் மற்றும் லாரிகளில் படுதாவால் மூடி கடத்திச் செல்வது தெரியவந்தது.

பின்னர், போலீஸார், அந்த இடத்திற்குச் சென்று, கஞ்சனூர் ஜி.கார்த்திக் (24), இடையாநல்லூர் பா.விக்னேஸ்வரன் (22), அய்யாவாடி பா.நீலமேகம் (25), திருமாந்துறை ஜெ.ஜகதீசன் (21), இதேப் பகுதியைச் சேர்ந்த நா.சிலம்பரசன் (23), கரூர் மாவட்டம், மேட்டுத்தர்கான்புலீயூர் ரா.பிரகாஷ் (27), இதேப் பகுதியைச் சேர்ந்த ச.பாரதிராாஜா (24), மன்னார்குடி, மேலவீதியைச் சேர்ந்த கி.இளங்கோ (40), நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் கு.பிரவீன் (26) ஆகிய 9 பேரை கைது செய்து திருவிடைமருதூர் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் அங்கிருந்த 3 லாரி, ஒரு டிராக்டர், 1 பொக்லைன் இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: "மணலூரில் உள்ள வயலில் சுமார் 4 அடிக்கு கீழ் மணல் உள்ளது. இதனையறிந்த கரூர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இயந்திரங்கள் மூலம் அந்த வயலில் பள்ளம் பறித்து, அதன் கீழ் உள்ள மணலை, உரிய அனுமதியின்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும், லாரியின் பின்புறம் ஏற்றப்படும் மணல் கீழே கொட்டாதவாறு, முழுவதும் படுதாவால் மூடி, வேறு பொருட்களைக் கொண்டு செல்வது போல தமிழகம் முழுவதும் விற்பனை செய்துள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் சுமார் 20 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளது" என்று போலீஸார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE