3 குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய்; அடுத்தடுத்து பறிபோன 4 உயிர்கள்: கணவர் இறந்த 3-வது நாளில் நடந்த துயரம்

By காமதேனு

கணவர் இறந்த நிலையில், தனது 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவியின் செயல் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு வைத்தீஸ்வரி(16), காளீஸ்வரி(12), விக்னேஷ்வரன்(2) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் கூலித் தொழிலாளியான ஈஸ்வரன் உடல்நலக் குறைவால் இறந்து போனார். இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மனவேதனையில் இருந்துள்ளனர்.

கணவர் இறந்த வேதனையில் இருந்து மீள முடியாமல் இருந்து வந்த பாண்டீஸ்வரி, இன்று காலை தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிணற்றுக்கு தனது 3 பிள்ளைகளுடன் சென்றுள்ளார். அங்கு யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது மகள்களை கிணற்றில் தள்ளிவிட்ட பாண்டீஸ்வரி தன் கையில் இருந்த மகனையும் கிணற்றில் போட்டுவிட்டு தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் இறந்த துக்கத்தில் பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்ட செய்தி பரவியதை தொடர்ந்து பாண்டீஸ்வரியின் உறவினர்கள் கிணற்றில் மிதந்த 4 பேரின் உடல்களை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வத்ராயிருப்பு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE