4,620 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிதி நிறுவனத்தின் நிர்வாகிகள் மூவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்தது ஹிஜாவு நிதி நிறுவனம். இங்கு முதலீடு செய்தால், 15 சதவீத வட்டி தரப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதை நம்பி லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இதன் மூலம் அந்த நிறுவனம் சுமார் 4,620 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடுகள் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 18 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 13 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகளான கோவிந்தராஜ், சுஜாதா மற்றும் துரைராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “மனுதாரர்கள் யாரும் நிறுவனத்தின் இயக்குநர்களாக இல்லை. எனவே இந்த முறைகேட்டுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை” என்று வாதாடினர்.
போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் வெளிநாட்டில் இருப்பதால் ரெட் நோட்டீஸ் அளித்து அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் மூவரும் சேர்ந்து பல கோடி ரூபாயைப் பொதுமக்களிடம் இருந்து வசூலித்துள்ளனர். விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதால் இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் D.செல்வம், “பலர் ஏமாற்றப்பட்டுள்ளதால் மூவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது” என எதிர்ப்புத் தெரிவித்தார். இதனையடுத்து, மூவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, “இது போன்ற நிதி நிறுவன மோசடிகளில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஏமாறுவதால் இது தொடர்பாக விழிப்புணர்வு உண்டாக்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?
அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!
உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்
தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!