பழநி வனப்பகுதியில் வாழும் பச்சைக் கிளிகளைப் பிடித்து விற்பனை செய்ய முயன்ற கணவன், மனைவிக்கு வனத்துறையினர் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அவர்களிடம் இருந்த பறவைகளை மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகளும், பறவை இனங்களும் வசித்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள அரியவகை பறவையான முனியாஸ் பறவை மற்றும் பச்சைக் கிளிகளை வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பழநி ஆவணி மூல வீதியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 40 பச்சைக்கிளிகள், 70 முனியாஸ் பறவைகள் ஆகியவற்றை வனத்துறையினர் மீட்டனர்.
சட்ட விரோதமாக இந்த பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற மாரிமுத்து மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் பொதுமக்கள் சட்டத்திற்கு புறம்பாக கிளிகளைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்த்தால், அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், தாங்கள் வளர்த்து வரும் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.