கன்னியாகுமரி மாவட்டத்தில் நள்ளிரவில் பெட்டிக் கடையையே மர்மக் கும்பல் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சத் தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பால்ராஜ்(55). இவரது மனைவி இந்திரா மேபல்(53). இவர் மஞ்சத் தோப்பு பகுதியில் மரப்பலகையாலான பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்தக் கடையை அவர் கடந்த ஓராண்டு காலமாக நடத்தி வந்தார்.
இந்நிலையில் இந்தக் கடையை இன்று காலை திறக்கச் சென்றார். அப்போது அவரது கடையே மாயமாகி இருந்தது. வடிவேலு படத்தில் வரும் கிணற்றைக் காணோம் நகைச்சுவையைப் போல், கடையைக் காணோம் சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் இந்திரா மேபல் புகார் அளித்தார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர்கள் 5 பேர், ஒரு மினி டெம்போவில் வந்து ஒட்டுமொத்த பெட்டிக் கடையையும் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். அதிலும் மர்மக் கும்பல் பெட்டிக்கடையையே தூக்கிச் சென்றது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.