காதல் திருமணம் செய்த ஒரே ஆண்டில் குடும்பத் தகராறில், கர்ப்பிணி மனைவியைத் தவிக்கவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சுனாமி காலனியைச் சேர்ந்தவர் அலங்கார பாபு(28). மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவரும் அதேபகுதியைச் சேர்ந்த ஓவியா என்பவரும் காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணம் கைகூடிய மகிழ்ச்சியில் அலங்கார பாபுவும், ஓவியாவும் வாழ்க்கையைத் தொடங்கினர். ஆனால் காதலித்த போது இருந்த அன்பும், நெருக்கமும் தம்பதிகளுக்குள் திருமணம் முடிந்ததும் குறையத் தொடங்கியது. இதனிடையே ஓவியா கர்ப்பமானார். தற்போது ஓவியா ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் அடிக்கடி அவருக்கும், கணவர் அலங்கார பாபுவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது.
இனால் தொடர்ச்சியான குடும்பத் தகராறில் மன வருத்தம் அடைந்த அலங்கார பாபு, வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
கணவர் இறந்த செய்தி அறிந்ததும் ஏழுமாத கர்ப்பிணியான ஓவியா கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.