மங்களம் அருவியில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் பலி: சுற்றுலாச் சென்ற தோழியின் கண்முன்னே நடந்த துயரம்

By காமதேனு

பச்சைமலைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் அங்குள்ள மங்களம் அருவியின் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்ட மக்களின் சுற்றுலாத்தலமான பச்சைமலையில் மங்களம் அருவி உள்ளது. இந்த அருவியில் குளிக்கவும், அப்பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான தமீம், ஜெஸ்வந்த், விஷாந்த் ஆகியோருக்கும், திருச்சி மாவட்டம் தா.பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஊட்டியில் இருந்து தா.பேட்டைக்கு நேற்று காலை காரில் வந்த 3 பேரும், அந்த பெண்ணுடன் பச்சைமலையில் உள்ள மங்களம் அருவிக்கு குளிக்கச் சென்றனர். அங்கு அருவிக்கு செல்லும் பாதையில் இருந்த தடைகளை அகற்றிவிட்டு, அவர்கள் குளிக்க சென்றுள்ளனர். மங்களம் அருவியின் தண்ணீர் விழும் தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் ஆழம் தெரியாமல், அவர்கள் குளிப்பதற்காக அருவியையொட்டி உள்ள பகுதியில் இருந்து குதித்ததாக தெரிகிறது.

இதில் தமீம், ஜெஸ்வந்த் ஆகியோர் தண்ணீருக்குள் இருந்த பாறையில் மோதியுள்ளனர். மேலும் நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஷாந்த் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது விஷாந்தும் தண்ணீரில் மூழ்கினார். அவர்களுடன் வந்த பெண், அதைக்கண்டு அபயக்குரல் எழுப்பிய சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மலைவாழ் இளைஞர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டனர்.

இதில் தமீம், ஜெஸ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. விஷாந்த் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிருக்கு போராடிய விஷாந்தை , துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE