10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது: சிதம்பரம் லாரி திருட்டு வழக்கில் சிக்கினார்

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் லாரி திருடிய வழக்கில் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு வல்லம்படுகை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய வழக்கில் கரூர் சிவானந்தா தெருவை சேர்ந்த அழகப்பன் மகன் மகாலிங்கம் (60) என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வந்த இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் அண்ணாமலை நகர் ஆய்வாளர் அம்பேத்கர், உதவி ஆய்வாளர் லெனின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் சிறப்பு காவல் ஆய்வாளர் புருஷோத்தமன், தலைமை காவலர் ஜெகதீசன், காவலர்கள் இளவரசி, மணிகண்டன் ஆகியோர் மகாலிங்கத்தை வியாழக்கிழமை (ஆக.22) கரூரில் கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் பேரில், அவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பத்தாண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடித்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE