கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்பதாகக் குடிமகன்கள் தொலைபேசி வழியாக புகார் சொன்னதன் பேரில், டாஸ்மாக் விற்பனையாளரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட ஏ.ஆர்.கேம்ப் ரோடு பகுதியில் மதுபான கடையில் பணியாற்றிவரும் விற்பனையாளர் மீது ஜூன் 12 அன்று அரசு நிர்ணயித்து உள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலை கேட்டதாகவும், கூடுதல் விலையைத் தராத வாடிக்கையாளரிடம் தகராறு செய்ததாகவும் தொலைபேசி புகார்வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த மதுபானக் கடையினை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தணிக்கை செய்தார். அப்போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததைக் கண்டித்து வாக்குமூலம் கேட்டபோது அந்த விற்பனையாளர் வாக்குமூலமும் தரவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
அதேபோல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மதுக்கடையிலும் உள்ள விலைப் பட்டியலில் குறிப்பிட்டு உள்ள தொகைக்கு அதிகமாக வழங்கக்கூடாது. இதேபோல் மதுபானம் அதிகவிலைக்கு விற்கப்படுவது தொடர்பான புகார்களை 18004252015 என்ற கட்டணமில்லாத எண்ணின் மூலம் புகார் கொடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.