மனைவியை சுட்டுக்கொன்ற கணவன், அதே துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் உயிரிழந்தான்.
உத்தரபிரதேசம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த தம்பதி அனேக் பால் - சுமன் பால். இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் என 4 குழந்தைகள்.
அனேக் - சுமன் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு எழும். அப்போதெல்லாம் இருவரும் இரைந்து திட்டிக்கொள்வார்கள். இரண்டொரு நாள் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மீண்டும் சண்டையில் குதிப்பார்கள்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக அனேக் - சுமன் இடையே மூண்ட சண்டை முடிவின்றி தொடர்ந்தது. அதன் நிறைவாக மனைவி சுமனை கணவன் அனேக் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதில், அதே குண்டு பாய்ந்ததில் இறந்திருக்கிறான். ஒரு குண்டு, இரு உயிர்களை பறித்திருக்கிறது. அந்த சம்பவம் நடந்தது குறித்து மொராதாபாத் ரூரல் எஸ்பி சந்தீப் குமார் இன்னும் விலகாத வியப்புடன் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கி உள்ளார்.
அனேக் அடிக்கடி அமானுஷ்ய பூஜைகளை மேற்கொள்வது வழக்கம். தம்பதியர் இடையிலான சண்டைக்கு இந்த வினோத பூஜைகளும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. சம்பவத்தன்று, ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் சண்டை குறித்து அனேக் விரக்தில் இருந்தார். பின்னர் ஒரு முடிவோடு வழக்கமான பூஜையில் அமர்ந்தார்.
ஒன்றரை மணி நேரம் நீடித்த பூஜையின் நிறைவாக, ஒரு முடிவோடு அனேக் எழுந்து வந்தார். மனைவியை மென்மையாக அழைத்தார். கணவரின் மாறிய முகமும், குரலும் சுமனின் கோபத்தையும் போக்கச்செய்யவே, கணவனின் குரலுக்கு கட்டுப்பட்டு அருகே சென்றார். மனைவியை ஆதுரமாய் அணைத்த அனேக், கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை சுமன் முதுகில் வைத்து ட்ரிக்கரை அழுத்தினார்.
அது நாட்டுத் துப்பாக்கி. பெரும் சத்தத்துடன் புல்லட்டை உமிழ்ந்தது. முதலில் மனைவி சுமன் முதுகை துளைத்த அந்த புல்லட், அடுத்தபடியாக மனைவியை அணைத்திருந்த கணவன் அனேக் நெஞ்சுக்குள் துளைத்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி இருவரும் பலியானார்கள்.
சம்பவ இடத்தில் ஆராய்ந்த போலீஸார், அனேக் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி உள்ளனர். மேலும், அனேக் அந்த துப்பாக்கியை எங்கிருந்து பெற்றார் என்பது குறித்தும், அவர் மேற்கொண்ட அமானுஷ்ய பூஜைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
தம்பதியர் இடையிலான பிரச்சினைக்கும், அனேக் விபரீத முடிவை எடுத்ததற்கும் பின்னணியில் அவர் மேற்கொண்ட மர்ம பூஜை வழக்கங்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் எஸ்பி சந்தீப் குமார். மனைவியை கொல்லும் முயற்சியில் தவறுதலாக குண்டு பாய்ந்து கணவர் இறந்தாரா அல்லது, திட்டமிட்டு கொலை - தற்கொலை இரண்டையும் ஒரே புல்லட்டில் சாதித்தாரா என்பது உட்பட பல்வேறு கேள்விகளுடன் போலீஸார் விசாரணை தொடர்கிறது.