ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த திருப்பம்: மேலும் 3 பேர் கைது

By KU BUREAU

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த அஸ்வத்தாமன், அவரது தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்திலையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

இந்தநிலையில் தற்போது இந்த கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் கோபி, குமரன் ஆகிய இருவரும் ஆந்திராவில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து ரவுடி ராஜேஷிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

புதூர் அப்பு என்பவரின் கூட்டாளி ராஜேஷ் என்பதும், சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரோடு தொடர்பில் இருந்தவர்கள் கோபி, குமரன் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜேஷ் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE